தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக விவகாரம் தொடர்பாக மலைக்கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல்குமார் நேரில் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மேலும், புலிகள் காப்பக விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 2009-ஆம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது முதல் நில அளவை எண்கள், பட்டா நிலங்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசு ஆவணங்களில் இப்பகுதியில் வெறும் 5 ஆயிரம் மக்கள் மட்டுமே வசிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையில் 99 கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் மக்கள் வசித்து வருவதாகக் கூறினார்.
மேலும், முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் இந்த விவகாரத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம் என்றும், இதனால் கடந்த 20 ஆண்டுகளாக மலைக்கிராம மக்கள் சாலை, பள்ளி, சுகாதார நிலையம், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய தமிழக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் பழைய வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மலைக்கிராம மக்களுக்கு உரிய விலக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், துணை ராணுவப் படையைக் கொண்டு ஒரு லட்சம் மக்களை வெளியேற்றும் சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கவும், மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தமிழக அரசு 100 சதவீதம் முழு வீச்சில் செயல்படும்.
வருசநாடு மலைக்கிராம மக்களை எந்தச் சூழ்நிலையிலும் வெளியேற்ற விடமாட்டோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.