• Sat. Nov 14th, 2026

வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..,

ByAjmalkhan saleemraja

Nov 14, 2026

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, பெரியாறு பிரதான கால்வாயில் முதல் போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரை தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திறந்து வைத்தார்.

பெரியாறு – வைகை பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், ஜூன் மாதத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட்டது.

அதன்படி, இன்று நவம்பர் 14ஆம் தேதி வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாயில் வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையின் மதகுகளை இயக்கி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து, முதல் 30 நாட்களுக்கு முழுமையாகவும், அடுத்த 70 நாட்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

நான்கு மாதங்கள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தற்போது முதல் போக சாகுபடிப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேலும், திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.