மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் அருகே இன்று (நவம்பர் 14) கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஹரி முருகன் மற்றும் செந்தூர் பாண்டி ஆகியோருக்குத் தொடர்புடைய காரிலேயே இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீர் தாங்கி வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, அருகிலிருந்த பிற வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்து வாகனப் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.
