தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுருளிப்பட்டி, சுருளி அருவியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் திருவிழா, இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.

போன வருடம் இருந்த நுழைவாயில் அலங்காரம் முதல், நிகழ்ச்சிகள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வருடம் நடைபெற்று வரும் இரண்டு நாட்கள் நிகழ்வானது, 14.11.2026 மற்றும் 15.11.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வினை, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகிருஷ்ணமூர்த்தி, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுருளி சாரல் விழா என்றாலே, தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் மிகப்பெரிய விழாவாகும்.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான போட்டிகள், பொருட்காட்சி, உணவுத் திருவிழா எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். அதனால், சுருளி அருவிப் பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
ஆனால், இந்த வருடம் விழாவில் நிகழ்ச்சிகள் குறைவாக இருக்குமோ என வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், விழா ஏற்பாடுகளிலும் முன்பு இருந்த அளவுக்குச் சிறப்பு இல்லை எனவும், நுழைவாயில் அலங்காரம், மின் அலங்காரம் ஆகியவை குறைவாகவே இருந்ததாகவும் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சுருளி சாரல் விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இருக்கை அமர்வது கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதேபோல், இந்த விழாவில் ரிப்பன் வெட்டித் துவங்கி வைத்த போது, அமைச்சர் அருகாமையில் மாவட்ட ஆட்சித் தலைவரை நிற்கவிடாமல், அருகிலுள்ள மதுரை மாவட்ட மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவரைப் பின்னுக்குத் தள்ளியதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒரு மாவட்டத்தின் மிகப்பெரிய விழாவில், அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இதனால், இவ்விழாவானது முன்னுக்குப் பின்னாக நடந்ததாகப் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.
சுருளி அருவி என்பது தேனி மாவட்டத்தின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற விழாக்கள், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால், விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, வருங்காலங்களில் சுருளி சாரல் விழாவை, முன்பு போல் சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உரிய முக்கியத்துவமும் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.