• Mon. Nov 2nd, 2026

மெகா தூய்மைப் பணி – ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ…,

கம்பம் முதல் கம்பம் மெட்டு வரை 10 கி.மீ. தூரத்துக்கு மெகா தூய்மைப் பணி
ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கம்பத்திலிருந்து கேரள மாநில எல்லையான கம்பம்மெட்டு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது. இந்தப் பணியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.

கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில், சபரிமலைக்குச் செல்லும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கம்பம்மெட்டு சாலை வழியாகப் பயணம் செய்வார்கள். இதையொட்டி, சாலையின் இருபுறங்களிலும் தேங்கிக் கிடந்த குப்பைகள், மருத்துவக் கழிவுகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி சாலையைத் தூய்மைப்படுத்தும் வகையில் இந்த மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசுகையில்..,

“கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்வார்கள். அவர்களின் பயணத்திற்கு ஏதுவாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதேபோன்று தேனி மாவட்டம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசுகையில், “கம்பம்மெட்டு சாலையின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் பயணம் செய்ய வேண்டும் என்பதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மெகா தூய்மைப் பணியில் தொகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவத்தினர், தொண்டு நிறுவனத்தினர் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் 50 பேர் கொண்ட குழு வீதம் நியமிக்கப்பட்டு, சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஒரே நேரத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கம்பம் தொகுதி மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் தேனிராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மெகா தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.