• Mon. Nov 2nd, 2026

பட்டாசு லோடு ஏற்றிய லாரியை தீ வைத்த காவலாளி

ByK Kaliraj

Nov 2, 2026

பட்டாசு ஆலை வெடி விபத்து என்று நினைத்தபோது சிசிடிவி காட்சியால் சிக்கிய குற்றவாளி, சிவகாசி அருகே உள்ள திட்டக்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான பாலாஜி பட்டாசு தொழிற்சாலை கங்கர் செவல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ஆக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் இத்தொழிற்சாலையில் தீபாவளி விற்பனைக்காக சரக்கு லாரியில் பட்டாசு பண்டல்கள் ஏற்றி வைக்கப்பட்டு, காலையில் கொண்டு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து என்ற தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற வெம்பக்கோட்டை தீயணைப்பு படையினர் பட்டாசு ஆலையில் சரக்கு ஏற்றி நின்று கொண்டிருந்த லாரியில் தீப்பற்றி எரிந்தது கண்டு உடனடியாக தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகியது.

இந்த நிலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது, என்பது குறித்து ஆலங்குளம் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உதவியுடன் தீ விபத்துக்கு காரணமான குற்றவாளியை ஆலங்குளம் போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த பட்டாசு ஆலையில் காவலாளியாக பணிபுரிந்தது வரும் விஜய கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தான் சரக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரியில் தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை பிடித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டாசு உரிமையாளருக்கும், காவலாளிக்கும் முன் விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து ஆலங்குளம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் காவலாளியே பட்டாசு லோடு ஏற்றப்பட்ட லாரியில் தீ வைத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.