• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மாணவர் அகிலன் மரண வழக்கு..,

BySeenu

Oct 23, 2026

கோவை கே.கே. நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவர் அகிலன் உயிரிழந்த விவகாரத்தில், சாதிய ரீதியிலான துன்புறுத்தலுக்குக் காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை அவிநாசி சாலை7யில் உள்ள கே.கே. நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவர் அகிலன், கடந்த 21-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் சாதிய ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதே தற்கொலைக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அகிலன் மரண வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த வழக்கில் இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை கூறினாலும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றும் முயற்சி நடைபெறுவதாகத் தாங்கள் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர். மாணவர் அகிலனைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் அவருடன் படித்த இரண்டு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், ஆசிரியர்களின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அகிலன் உயிரிழந்ததற்குத் தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரே காரணம் எனத் தாங்கள் குற்றம்சாட்டுவதாகத் தெரிவித்த அவர்கள், இருவரையும் கைது செய்யும் வரை மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.

மேலும், இரு ஆசிரியர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், பணியிடைநீக்கம் மட்டும் போதாது; சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

முன்னாள் மாணவரும் புகார் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு

அகிலன் படித்த அதே பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர் ஒருவர், தாம் சந்தித்ததாகக் கூறப்படும் சாதிய ரீதியிலான அவமானங்கள் குறித்துப் புதிதாகப் புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அந்த மாணவர் மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, தாம் சாப்பிடுவதாகக் கூறியதற்காகத் துன்புறுத்தப்பட்டதாகவும், கேலி செய்யப்பட்டு முட்டிபோட வைக்கப்பட்டதாகவும் தலைமை ஆசிரியர் அருண்குமார் மீது குற்றம்சாட்டியதாகத் தெரிவித்தனர்.

இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றனவா என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சாதி அடையாளத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது

பள்ளிகளில் மாணவர்களின் சாதி விவரங்களை வெளிப்படுத்தும் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், மாணவர்களின் சாதி அடையாளம் சக மாணவர்களிடையே தெரியவருவது துன்புறுத்தலுக்கு வழிவகுக்கக் கூடும் என்றனர்.

மாணவர்களின் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான நிர்வாகத் தேவைகளுக்காகப் பெறப்படும் சாதிச் சான்றிதழ் விவரங்களைப் பயன்படுத்தி, பள்ளியில் மாணவர்களைச் சாதியின் அடிப்படையில் அடையாளப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாகத் தெரியவந்தால், அதற்கான காரணங்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரினர். மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்க உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

கோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

அகிலன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது இதுபோன்ற அவமானங்களைச் சந்திக்கவில்லை என்றும், கே.கே. நாயுடு பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்படும் தகவல் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

அரசு நிதியுதவியுடன் செயல்படும் பள்ளிகளில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது, அரசு உரிய தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வருக்கும் அரசுக்கும் கேள்வி

மாணவர் அகிலனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர் மிகுந்த துயரத்துடன் போராடி வருவதாகக் கூறிய அவர்கள், பெற்றோரின் கோரிக்கையை அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

இரு ஆசிரியர்களையும் கைது செய்யக் கோருவதில் அரசு ஏன் தாமதம் செய்கிறது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.

பள்ளிக் கல்வித்துறை, குழந்தைகள் நல அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகள் இவ்விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், அகிலன் மரண வழக்கில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாகச் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மாணவர் அகிலனுக்கு நீதி கிடைப்பதுடன், இனி எந்த மாணவரும் சாதிய ரீதியிலான அவமானங்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ளாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமுருகன் காந்தி மற்றும் நாகை திருவள்ளுவன் வலியுறுத்தினர்.