புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள அனவயல் ஊராட்சியில் சுக்கிரன் குண்டு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் இன்றைக்கு உள்ள நவீன ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தினாலும் அவர்களது வாழ்வியல் முறை எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

அனவயல் ஊராட்சியில் ஒதுக்குப்புறமாக இருந்த போதிலும் ஒரு கிலோமீட்டர் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தான் அவர்களுக்கு பேருந்து வசதிகள் எல்லாம் இருக்கின்றன. பள்ளிகள் இருக்கின்றன. நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வந்த போதிலும் ஒரு சில குழந்தைகள் மட்டும்தான் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் ஆண் குழந்தை பெண் குழந்தை என அனைவரும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் எலி பிடிப்பவர்கள் பாம்பு பிடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு நிலை மட்டும் மாறி இருக்கிறதே தவிர மற்றபடி வாழ்வியலிலோ நாகரிகத்திலோ கல்வியிலோ பொருளாதாரத்திலோ எந்த வகையிலும் முன்னேறவில்லை.

இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கூறுகையில் நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். என்னுடன் சேர்ந்து இன்னும் இரண்டு மூன்று பேர் மட்டுமே அதுவரை படித்திருக்கிறோம் மற்றவர்கள் படிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். எனது பெற்றோர் படிக்கவில்லை. தாத்தா பாட்டியும் படிக்கவில்லை. இந்த பகுதியில் உள்ள அனைவரும் கூலி வேலைக்கு தான் சென்று வருகிறோம். பெண்களுக்கு இருநூறு ரூபாய் கூலி தருகிறார்கள். ஆண்களுக்கு 300 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரை கூலியாக தருகிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் தேங்காய் வெட்டும் வேலைக்கு தான் சொல்கிறார்கள். என்ன வேலைக்கு சென்றாலும் அதுதான் எங்களுக்கு கூலி. மற்ற ஊர்களில் இருந்து வேலைக்கு செல்பவர்களுக்கு 500 1000 என்று கூலி கொடுக்கும்போது எங்கள் பகுதியில் இருந்து செல்பவர்களுக்கு மட்டும் இவ்வளவு தான் தருகிறார்கள். இந்த பகுதியில் 70 ஆண்டு காலமாக மக்கள் குடியிருந்து வருவதாக கூறுகிறார்கள். இங்கு இருப்பதெல்லாம் குடிசை வீடுகள் தான். எந்த வீட்டுக்கும் பட்டா இல்லாததால் எந்த விதமான அரசு உதவிகளோ சலுகைகளோ எங்களால் பெற முடியவில்லை. பட்டா வாங்க வேண்டும் என்ற அக்கறை எனது பெற்றோருக்கோ தாத்தா பாட்டிக்கோ இருந்ததில்லை அதற்கான அவசியமா அவர்களுக்கு ஏற்பட்டதா ஏற்பட வில்லையா என்பது தெரியவில்லை ஆனால் எங்களுக்கு இப்போது பட்டா இருந்தால் தான் நாங்கள் இங்கு வசிக்க முடியும் என்ற கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

ரேவதி என்கிற பெண்மணி கூறுகையில் இந்த பகுதியில் 3 – 4 தலைமுறை ஆக வசித்து வந்திருக்கிறார்கள். இது குளத்து புறம்போக்கு இடமாக இருக்கிறது என்று தான் முன்னோர்கள் இங்கு குடியேறி வந்திருக்கிறார்கள். இதுவரை பிரச்சினை இல்லை கடந்த மூன்று ஆண்டு காலமாக இது எங்களுக்கு சொந்தமான இடம் என்று அருகில் உள்ள காசிம் புதுப்பேட்டை சேர்ந்த சில இஸ்லாமியர்கள் வந்து குடிசைகளை எடுக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுத்து எங்களுக்கான இடத்தை அளந்து கொடுங்கள் பட்டா கொடுங்கள் என்று கேட்டு வருகிறோம். எந்த அதிகாரியும் எங்களது கோரிக்கையை கேட்டுக் கொள்ளாமல் எங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து நேரில் கள ஆய்வு செய்து பார்த்து சென்றிருக்கிறார்கள். இதற்கு முன்பு செய்யாமல் இருந்தது போகட்டும் இப்போதாவது எங்களுக்கு உரிய உதவியை செய்ய வேண்டும். உணவிற்கும் துணிமணிக்கும் நாங்கள் உழைத்து ஏதோ பாடுபட்டு உயிரோடு இருக்கிறோம். ஆனால் இருப்பதற்கு இடமில்லாமல் இருப்பதால் பலரிடமும் மானங்கெட்டு நிற்கிறோம் என்று வேதனையோடு தெரிவித்தார்.
இதுகுறித்து தேமுதிக ஒன்றிய செயலாளர் பால்ராஜ் கூறுகையில்.. சுத்திரன் கொண்டு பகுதியில் அதிகப்படியாக முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள்தான் வசிக்கிறார்கள். ஆனால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் உயிரோடு இருந்தபோது இப்பகுதியில் உள்ளவர்களை கணக்கில் எடுத்து 36 பேருக்கு சிறிய அளவில் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தார். அந்த நேரத்துக்கு உள்ள நிலையில் அதுதான் செய்ய முடிந்தது. அதே நேரத்தில் அந்த வீடுகளுக்கும் இதுவரை பட்டா வழங்காமல் இருப்பதால் அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு எந்த வகையிலும் அரசு உதவிகள் பெற முடியவில்லை. இப்போது அந்த குடும்பங்கள் பெருகி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கும் குடும்ப அட்டை கூட கிடையாது. தேமுதிக சார்பில் இந்தப் பகுதி மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்கிற வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புளிச்சங்காடு கைகாட்டியில் சாலை மறியல் போராட்டம் எல்லாம் செய்தோம். வேண்டி ஏற்பாடுகளை செய்து தருகிறோம் என்று அந்த நேரத்தில் அதிகாரிகள் சொன்னார்கள். அதன் பிறகு எதுவும் செய்யவில்லை.

இந்த குடும்பங்களில் இருந்து அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறார்களே தவிர படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் கிடையாது. அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் முன்னேற்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை அதிகாரிகளுக்கும் கிடையாது. அரசியல்வாதிகள் இவர்களிடமிருந்து பெறும் வாக்குகளை மட்டும் எண்ணி பார்க்கிறார்களே தவிர இவர்களது வாழ்வியலை எண்ணிப் பார்க்கவில்லை. ஆலங்குடி தொகுதி முத்தரையர் தொகுதி என்று சொல்வது மட்டுமல்ல அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் முத்தரையர் இன வேட்பாளர்களை தான் முன்னிறுத்துகிறார்கள். முத்தரையர் இனத்துக்காக சாதிச் சங்கங்கள் இருந்து செயல்படுவதாக சொல்கிறார்களே தவிர சுக்கிரன் குண்டு மக்களுக்கு என்று இதுவரை எதுவும் செய்யவில்லை. முத்தரையர் இனத்தில் இருக்கும் மற்ற மக்கள் சுக்கிரன் கொண்டு மக்களிடம் எந்த எடுப்பினை குடுப்பினையும் வைத்துக் கொள்வது கிடையாது. அவர்களை பூச்சிக்காட்டு இனமாக பார்க்கிறார்கள்.
இவர்களுக்கு கல்வி அறிவு இல்லாததால் அவர்களாக முன்னேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக. மற்றவர்கள் தான் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். தேமுதிக சார்பில் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் 20க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்திருக்கிறேன். ஆனால் சிறிதளவும் முன்னேற்றம் கிடையாது. இதற்கு முன்பு இருந்த அரசுகள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை இப்போது இருக்கும் அரசு இந்த சுக்கிரன் குண்டு மக்களுக்காக ஓர் அடுக்குமாடி குடியிருப்பாவது கட்டிக் கொடுத்து அவர்களை குடியேற்றினால் தான் அவர்கள் முன்னேற முடியும். குடிசையிலே இருந்தால் அவர்கள் சிந்திக்கவும் முடியாது செயல்படவும் முடியாது அவர்களுக்கு என்று குறைந்தபட்சம் ஓர் அடுக்குமாடி குடியிருப்பாவது கட்டி வாழ வைக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்காக பல வகையிலும் உதவிகள் செய்து வரும் எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜா கூறுகையில் இந்த மக்களுக்காக ஒன்னே முக்கால் லட்ச ரூபாய் செலவில் ஒரு சிறிய கட்டிடம் கட்டி அதில் இங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கவும் டியூசன் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தோம் சில மாதங்கள் வரை வந்த குழந்தைகள் அதன் பிறகு வரவில்லை. பெற்றோர் அந்த குழந்தைகளை கூலி வேலைக்கு அனுப்பி விடுவதால் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள் அதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.




