இந்திய மருத்துவ சங்கத்தின் தாம்பரம் கிளை சார்பில் நடைபெற உள்ள நம்ம ஹெல்த் மெகா எக்ஸ்போ 2026 தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்களை அழைப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தாம்பரத்தில் உள்ள நிர்மல்ஸ் கண் மருத்துவமனையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், பல முக்கிய நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைச் சேர்ந்த உள்ளூர் செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 அரங்குகள், 50 மருத்துவமனைகள், 400 மருத்துவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான மருத்துவக் கண்காட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சி, பொதுமக்களிடையே மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாள்தோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இத்தகைய பொதுநிகழ்ச்சிக்கு, அனைத்து ஊடகங்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டாமா? என்ற கேள்வியை உள்ளூர் செய்தியாளர்கள் எழுப்புகின்றனர்.
பத்திரிகையாளர் சந்திப்புக்கான அழைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ் குமாரிடம் (கைபேசி எண் 98845 45000) வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்குத் தெரிந்த சிலருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், சில யூடியூப் ஊடகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அனுபவமிக்க உள்ளூர் செய்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால் செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி நடத்தப்படும் மருத்துவக் கண்காட்சியின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அப்படியிருக்க, செய்தியாளர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பது ஏன்? அழைப்புப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக IMA தாம்பரம் கிளை நிர்வாகமும், நிர்மல்ஸ் கண் மருத்துவமனை நிர்வாகமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ விழிப்புணர்வை வலியுறுத்தும் அமைப்புகள், ஊடகங்களை அணுகுவதிலும் சமத்துவத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதே செய்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



