மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களை வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கவும் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் ‘தி பிக் புக் ஃபேர்’ என்ற தலைப்பில் 3 நாள் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

அக்.8 முதல் 10-ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில், ‘சப்னா புக் ஹவுஸ்’ நிறுவனத்தின் பங்களிப்புடன் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியின் நிறைவு விழாவில் பேசிய பள்ளியின் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசுவாமி, “வகுப்பறைக் கல்வியைத் தாண்டியும் மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். இன்றைய வாசகர்களாக உருவாகும் குழந்தைகள், நாளைய சிறந்த தலைவர்களாக உருவெடுக்க இந்த புத்தகக் கண்காட்சி பெரிதும் உதவும்” என்று குறிப்பிட்டார்.

சுகுணா குழுமங்களின் தலைவர் வி. லட்சுமிநாராயணசுவாமி உரையாற்றுகையில், “கல்வி உள்பட அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், வாசிப்புப் பழக்கம் குழந்தைகளை ஆக்கப்பூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து வெற்றிபெறத் துணைபுரியும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளியின் குழந்தைப் பருவக் கல்விப் பிரிவின் இயக்குநர் சாந்தினி அனிஷ்குமார் பேசுகையில், மாணவர்கள் டிஜிட்டல் திரைகளை மட்டுமே பார்ப்பதைத் தாண்டி, புத்தக வாசிப்புப் பழக்கத்தைக் கைக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் பூவண்ணன், டீன் அகாடமிக்ஸ் ராஜேஷ்குமார், கல்வித் திட்டத் தலைவர் அஷ்வின், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான நூல்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.



