கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துபாலாஜி (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவருடன் படித்து வரும் குன்னூரைச் சேர்ந்த சூர்யா (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் குறிச்சி குளக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வந்த போது, அவர்களுக்குப் பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு அவசர சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முத்துபாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சூர்யாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துக் கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



