மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை காலை மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், புரட்டாசி மாதம் 4 வது வெள்ளி கிழமை மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெறும்
திருப்பரங்குன்றம் கோவிலை சுற்றி உள்ள கிராம மக்கள் சார்பாக நடைபெறும் மலை மேல் எடுக்கும் விழாவின் போது கதம்ப சாதம் சமைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மலைமீது தங்களுக்கும் சமையல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று மாலை 4 மணியளவில் தொல்லியல் துறை சார்பில் கோயில் நிர்வாகத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மலை மீது யாரையும் சமையல் செய்ய அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் திருப்பரங்குன்றம் பகுதியில் பரவிய நிலையில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி, திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அறநிலை துறை துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நாளை மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பான இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தீபத் தூண் தொடர்பாக திருப்பரங்குன்றம் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ள நிலையில் தற்போது கதம்ப சாப்பாடு செய்வதிலும் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சையால் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது.




