• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களின் மாபெரும் உலக சாதனை முயற்சி..,

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள முதல்வர் திருமண மண்டபத்தில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு RABAA Book of World Records சார்பில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு இரண்டு பிரமாண்டமான உலக சாதனை முயற்சிகளில் பங்கேற்றனர்.

முதல் நிகழ்வாக, வண்ணமயமான கலர் க்யூப்ஸ்களை பயன்படுத்தி மகாத்மா காந்தியின் உருவம் மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இந்த கலைப்படைப்பு, அவர்களின் படைப்பாற்றல், திறமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. காந்தியின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டதை பொதுமக்களும் பார்வையாளர்களும் பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது உலக சாதனை முயற்சியில், மாணவர்கள் புறா வடிவங்களை வெட்டி, வண்ணம் தீட்டி, கண்கள், வாய், இறக்கைகள் உள்ளிட்ட பகுதிகளை அழகாக வடிவமைத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தயாரித்த புறா வடிவங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, சுமார் 20 முதல் 25 அடி அளவிலான பிரமாண்ட பேனரில் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.

அமைதி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் புறாக்களின் வடிவத்தில் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாணவர்களின் தேசப்பற்று, கலைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு இந்த சாதனை முயற்சியில் வெளிப்பட்டது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த இரண்டு மாபெரும் உலக சாதனை முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.