திண்டுக்கல் அருகே உள்ளது கள்ளிப்பட்டி. அங்கு அரசு அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கள்ளிப்பட்டி அருகே உள்ள அலக்குவார்பட்டி சேர்ந்த இளைஞர்கள் மதுபானம் குடிக்க கள்ளிப்பட்டிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே அலக்குவார் பட்டியலில் உள்ள நாடக மேடை அருகே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி உட்பட நான்கு பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் அலக்குவார் பட்டியைச் சேர்ந்த பகவதி வயது 22, ராஜ்குமார் வயது 21, திவாகர் வயசு 22, சூர்யா வயது 20, மாதவன் வயது 25, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தகராறு சம்பவத்தில் சம்பந்தமில்லாத இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறி அலக்குவார்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காவல்துறையை கண்டித்து .நள்ளிரவில் திண்டுக்கல் கரூர் 4 வழிசாலையில் உள்ள கள்ளிப்பட்டி பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் இரு பக்கமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் மஞ்சுமா தலைமையில் தாடிக்கொம்பு போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் 30 நிமிட சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.








