• Sat. Oct 31st, 2026

கோவை மத்திய சிறை வாசலில் போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பியோட்டம்..,

BySeenu

Oct 31, 2026

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்ட வழிப்பறி வழக்கின் கைதி, போலீசாரின் பிடியில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோட்டம்… நஞ்சப்பா சாலை, வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதமும் இதே நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடியவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மத்திய சிறை நுழைவுவாயிலிலேயே போலீசாரின் பிடியில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் தொடர்புடைய ராகவன் என்பவரை அன்னூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் போலீசார் ராகவனை வாகனத்தில் அழைத்துக்கொண்டு கோவை மத்திய சிறைக்கு வந்தனர்.

சிறையின் நுழைவுவாயிலை அடைந்ததும், வாகனத்தில் இருந்து இறக்கி சிறைக்குள் அழைத்துச் செல்ல போலீசார் முயன்றுள்ளனர். அப்போது, போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்பிய ராகவன், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து திடீரென தப்பியோடியுள்ளார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத போலீசார், அவரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாததால் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பந்தயசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தப்பியோடிய கைதியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சிறை வளாகம், நஞ்சப்பா சாலை, வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், கோவை மாநகரின் முக்கிய பகுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தப்பியோடிய ராகவன் கடந்த ஜூன் மாதமும் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய அதே நபரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தேனி மாவட்டத்தில் கைதிகள் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கோவை மத்திய சிறை நுழைவுவாயிலிலேயே கைதி தப்பியோடியிருப்பது காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தப்பியோடிய கைதியைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.