தாம்பரம் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் மற்றும் திமுக, அதிமுக, சுயேட்சை உள்ளிட்ட 70 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சங்கர், கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 750 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு பதிலாக உலக வங்கியில் கடன் கோரியுள்ளோம் என்ற தொடர்பில்லாத விளக்கமே வழங்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒரே நிறுவனம் தொடர்ந்து டெண்டர் பெற்று வருவது ஏன் என்ற கேள்விக்கும் அதிகாரிகள் தெளிவான பதில் அளிக்கவில்லை என்றும் சங்கர் கூறினார்.
கழிவுநீர் சேற்றை அகற்றும் பணிகளில் முதியோர் இல்லங்களைச் சேர்ந்த வயதான நபர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இது மனிதநேயமற்ற செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல், அதிமுக கவுன்சிலர்கள் முன்வைக்கும் தீர்மானங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், திமுக நிர்வாகம் தங்களது கட்சி உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பலமுறை போராட்டங்கள் நடத்திய போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவுடன் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் சங்கர் அறிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் எழுந்த இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




