உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோவிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினர் சைக்கிள் ரோந்து பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

இதற்காக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. காவல்துறையினர் சைக்கிள்களில் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ரோந்து சென்று, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் சைக்கிள் ரோந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




