கடந்த 100 நாள் த.வெ.க அரசின் சாதனையாக அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் உள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
எடப்பாடியார் ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 100 கோடி ஒதுக்கப்பட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தப்பட்டது.
முதல்வர் விஜய் வெறும் அலங்கார வார்த்தைகள் பேசுவது மட்டுமே நல்லாட்சிக்கு அழகல்ல, விஜய்யின் சாயம் வெளுத்து வருகிறது. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருப்பதை மறந்துவிட்டாரா?
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு..,
தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 100 நாள் சாதனையாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், காய்கறி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இதை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தவெக அரசு மௌனமாக இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக போர் நடந்ததின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.
அத்தியாவசிய தேவையாக உள்ள சர்க்கரையின் விலை வழக்கமாக ஒரு கிலோ ரூபாய் 40 முதல் அதிகபட்சமாக ரூபாய் 45 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கடந்த 20 நாட்களில் பல மடங்கு விலை உயர்ந்து கிலோவிற்கு ரூபாய் 25 வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 70 முதல் 80 வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்னொருபுறம் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; அதன் காரணமாக வெங்காயத்தின் சில்லறை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூபாய் 35க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் தற்போது கிலோவிற்கு ரூபாய் 20 வரை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ ரூபாய் 55க்கு விற்கப்படுகிறது; வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூபாய் 70 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சின்ன வெங்காயத்தின் விலையும் ஏறுமுகத்திலே இருந்து வருகிறது; ஒரு கிலோ ரூபாய் 80 வரையிலும் வெளி மார்க்கெட்டில். ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அதோடு மற்ற காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது; நாட்டு தக்காளி ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரையிலும், உருளைக்கிழங்கு ரூபாய் 15 முதல் ரூபாய் 35 வரையிலும், கேரட் ரூபாய் 50 முதல் 70 வரையிலும், பீன்ஸ் ரூபாய் 60 முதல் 80 வரையிலும், பீட்ரூட் ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரையிலும், முட்டைக்கோஸ் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரையிலும், வெண்டைக்காய், கத்திரிக்காய் ரூபாய் 25 முதல் 30 வரையிலும், நாட்டு கத்திரிக்காய் ரூபாய் 30 முதல் 40 வரையிலும், பாவற்காய் ரூபாய் 40, புடலங்காய் ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரையிலும், சுரைக்காய் ரூபாய் 15 முதல் ரூபாய் 25 வரையிலும், முருங்கைக்காய் ரூபாய் 25 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சேனைக்கிழங்கு, ரூபாய் 30 முதல் 40, வரையிலும், பச்சை மிளகாய் ரூபாய் 50 லிருந்து 60 வரையிலும், இஞ்சி ரூபாய் 90 முதல் ரூபாய் 180 வரையிலும், பூண்டு ரூபாய் 130 முதல் 240 வரையிலும் என காய்கறிகள் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கிலோவிற்கு ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ரூபாய் 1400க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1700க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் 1800 வரை விற்பனையாகிறது. மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

ஏடிடி அரிசி ரூபாய் 900 லிருந்து ரூபாய் 1300 ஆகவும், பொன்னி அரிசி ரூபாய் 1400 லிருந்து 1800 ஆகவும், வெள்ளை பொன்னி அரிசி ரூபாய் 1650 லிருந்து 1950 ஆகவும், பிரியாணி அரிசி ரூபாய் 130 லிருந்து ரூபாய் 160 ஆகவும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கு ஏற்ப விலையிலே ஏற்ற இறக்கம் இருக்கும் என்றாலும், தற்போது உள்ள அளவுக்கான விலை உயர்வு என்பது ஒரு கடுமையான உயர்வாக பார்க்கப்படுகிறது.
அதேபோன்று எண்ணெய் விலை 5% முதல் 6% வரை உயர்ந்துள்ளது, ஒரு லிட்டர் ரூபாய் 140 முதல் ரூபாய் 175 வரை உயர்ந்திருக்கிறது. பாமாயில் லிட்டர் 90 முதல் ரூபாய் 140 வரை விற்கப்படுகிறது. இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பது அதுவும் சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த வேளையில் கூட அது பற்றி அவர்கள் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
கடந்த காலங்களிலே எடப்பாடியாரின் தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலே பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் சந்தை விலையை தொடர்ந்து கண்காணித்து, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் போது உணவு கொள்கையின் மூலமாகவும், சந்தையில் நேரடியாக தலையிடுவதன் மூலமாகவும் விலை கண்காணிப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் அடையும்போது அதை கட்டுப்படுத்த எடப்பாடியாரின் தலைமையிலான அம்மாவின் அரசு விலை கட்டுப்பாட்டு நிதியினை உருவாக்கி, ரூபாய் 100 கோடியாக நிதியினை மூலதனமாக ஒதுக்கீடு செய்ததன் மூலம் விலைவாசி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது கடந்த கால சாதனை வரலாறு.
ஆகவே முதல்வர் தலைமையிலான தவெக அரசில் வெளிப்படையான நேர்மையான ஆட்சி வேண்டும் என்பதற்காக முதல்வர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் .
முதல்வர் விஜய் வெறும் அலங்கார வார்த்தைகள் பேசுவது மட்டுமே நல்லாட்சிக்கு அழகல்ல, சாயம் வெளுத்து வருகிறது. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருப்பதை மறந்துவிட்டாரோ என்னவோ, ஒன்றும் தெரியவில்லை. மொத்தத்தில் முதல்வர் விஜய்யின் சாயம் வெளுத்து வருவது நமக்கு கண்கூடாக தெரிகிறது, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்




