புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கீழச்சவரியார்பட்டினம், கிராமத்தில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் நடைபெற்ற கிராமிய முகாம் – 2026 நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் கிராமப்புறங்களில் உள்ள மக்களுடன் மக்களாக பழகி அங்குள்ள பல்வேறு கலாச்சாரங்களையும் பண்பாட்டு வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக இந்த முகாம் நடத்தப்பட்டது.

இங்கு பெண்களின் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் பெண்களின் பங்கேற்பையும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது.

தொடர்ந்து மாவட்ட பெண்கள் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி எஸ். ஃபசினா பானு பெண்களுக்கான கல்வி, கடன் உதவிகள், தாட்கோ திட்டம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 50 சதவீத சலுகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இதே முகாமில் மேலும் போதையற்ற வாழ்வு – வளமான எதிர்காலம் என்ற தலைப்பிலும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கிராமிய முகாம் – 2026ன் ஒரு பகுதியாக, “போதையற்ற வாழ்வு – வளமான எதிர்காலம்!” என்ற கருப்பொருளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை 9.00 முதல் 11.15 மணி வரை விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் தெரு நாடகம் நடைபெற்றது. திருமதி அருள்செல்வி, சுய உதவிக் குழுத் தலைவி பேரணியை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் திருச்சி மத்திய சிறைச்சாலை திட்ட ஒருங்கிணைப்பாளர் A. சந்தோஷ், கருத்துரை வழங்கினார்.

மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் M. பழனிசாமி தலைமையுரையாற்ற, புதுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர், மணிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அருட்தந்தையர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




