புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அம்மாச்சத்திரம், செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தற்போது இரவு எட்டரை மணிக்கு விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்து வட்டம் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

இதுகுறித்து அம்மாச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில் இரவு 8:30 மணியில் இருந்து இந்தப் பகுதியில் ஒரு விமானம் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. சாதாரணமாக வந்து சென்றிருந்தால் யாரும் அச்சப்பட்டு இருக்க மாட்டோம். இரவு நேரத்தில் எங்கள் கிராமத்தை மட்டுமல்லாது அருகில் உள்ள நார்த்தாமலை செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களையும் சுற்றிச்சுற்றி வந்ததால் எந்த நேரத்திலும் எதுவும் நடந்து விடும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் பயந்து விட்டோம்.

அரை மணி நேரம் வட்டம் அடித்த பிறகு தான் ஒரு வழியாக திருச்சிக்கு சென்று விட்டது. தற்போது ஒன்பது மணிக்கு நாங்கள் திருச்சி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது இப்போது இங்கு விமான நிலையத்தில் இறக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்ன பிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. அரை மணி நேரம் பதறிப் போய் விட்டோம்.
அதற்கு காரணம் என்னவென்றால் கடந்த ஆண்டு இதே பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று மாலை நேரத்தில் இதே போல் அரை மணி நேரம் வட்டமடித்து ஓர் ஐந்தாறு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் எங்கள் ஊர் நடுவில் புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஓடி நின்றது. அதில் இருந்த விமானிகள் பத்திரமாக உயிர் மீண்டனர். அந்த விமானம் இன்ஜின் பழுதானதால் எப்படி இறக்குவது என்று தெரியாமல் அரை மணி நேரம் போராடி தான் சாலையில் இறக்கி இருக்கிறார்கள்.

ஆனாலும் அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வராமல் இருந்தது அதிர்ஷ்ட வசமானது. விமானம் பழுதானது போக விமானிகள் உயிர் மீண்டது என்பது எங்களது கிராமமே மீண்டதாக நினைத்துக் கொண்டோம். அந்த உயிர்ப் பயத்தில் இருந்து நாங்கள் மீள்வதற்கு உள்ளாகவே இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்கள் கிராமம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தையும் பீதிக்கு உள்ளாக்கிவிட்டது. திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் இப்போது எங்களுக்கு நிம்மதி வந்திருக்கிறது என்று அதிர்ச்சியுடன் தொலைபேசியில் கூறினார். அத்துடன் ஏற்கனவே ஊரின் நடுவே சாலையில் பாதுகாப்பாக இறக்கப்பட்ட பயிற்சி விமானத்தின் படங்களையும் அனுப்பி இருக்கிறார்.




