“அரசு வழங்கும் குடிநீரே சரியாக இல்லை; தனியாரிடம் ஒப்படைத்தால் எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பி, தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தாம்பரம் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் திட்டத்தை, பிரைவேட் பப்ளிக் பார்ட்னர்ஷிப் எனப்படும் பி.பி.பி. திட்டத்தின் கீழ் தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, மண்டலம் 2 மற்றும் 3 பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்க இணைப்பு மைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், “குடிநீருக்காக மக்கள் ஏற்கனவே சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி என இரண்டு வகையில் வரி செலுத்தி வருகின்றனர். அத்தியாவசிய சேவையான குடிநீரை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மண்டலம் 2 மற்றும் 3 குடியிருப்போர் நலச் சங்க இணைப்பு மையச் செயலாளர் முருகையன், “தற்போது மாநகராட்சி வழங்கும் குடிநீரே முறையாகவும் சுத்தமாகவும் இல்லை. இந்நிலையில் குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மக்களுக்கு கூடுதல் சுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை அரசே நேரடியாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், தாம்பரம் தொகுதி அமைச்சர் சரத்குமார் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி ஆகியோர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கோரிக்கைகளை கேட்க நேரம் ஒதுக்காமல் தவிர்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேநேரத்தில், “முதல்வர் விஜய் வெளிப்படையான நிர்வாகம் வழங்குவோம் என அறிவித்திருந்தாலும், நடைமுறையில் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்காத நிலை உள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
குடிநீர் திட்டத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட்டு, மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.





