சிவகாசியில் உள்ள சங்கரலிங்கம் புவனேஸ்வரி கல்லூரி மருந்தியல் (SBCP) கல்லூரியின் 1989–1991 ஆம் ஆண்டு டிப்ளமோ இன் பார்மசி மாணவர் குழுவினர், தாங்கள் கல்லூரியில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்ததிலிருந்து சரியாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 மீண்டும் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி, தங்களுக்கு வழிகாட்டியாகவும் வாழ்க்கையை வடிவமைத்தவர்களாகவும் இருந்த ஆசிரியர்களைக் கௌரவித்தனர்.

“Pharma Gems” என்ற பெயரில் ஒன்றிணைந்த சுமார் 40 முன்னாள் மாணவர்கள், ஆனைகுட்டம் வளாகத்தில் நடைபெற்ற Alumni Meet – 2026 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒரு சாதாரண கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற எல்லையைத் தாண்டி, தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் நெகிழ்ச்சியான நிகழ்வாக இந்தச் சந்திப்பு அமைந்தது.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு நன்றியையும் மரியாதையையும் செலுத்தும் வகையில், அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அன்பான பாராட்டுகளையும் வழங்கினர்.
அவர்களின் அன்பிற்குரிய முன்னாள் விரிவுரையாளர்களான டாக்டர் சம்பத் குமார் தேவராஜன் (Executive Director & CSO, Axxelent Pharma Science Pvt Ltd) மற்றும் திரு. சி. சீனிவாசன் (Administrative Officer) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்தியாவின் மருந்துத் துறையில் இன்று தாங்கள் பெற்றுள்ள நிலைக்கு, டாக்டர் சம்பத் குமாரின் சிறப்பான வழிகாட்டுதல் முக்கிய காரணமாக இருந்ததாக முன்னாள் மாணவர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.

மேலும், கல்லூரியின் நிறுவனரின் தொலைநோக்குப் பாரம்பரியத்தை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்து வரும் நிர்வாகத்திற்கும், குறிப்பாக தாளாளர் திரு. எஸ். ஹரிராம் சுந்தரவெல் அவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் தங்களது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
தங்களது மாணவர் காலத்தில் கல்லூரியை வழிநடத்திய முன்னாள் தாளாளர் அமரர் திரு. தர்மர் அவர்களையும்,
மறைந்த பேராசியர் திரு கண்ணன் அவர்களையும் முன்னாள் மாணவர்கள் அன்புடனும் மரியாதையுடனும் நினைவுகூர்ந்தனர்.
«“35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கு நின்றிருப்பது எங்களால் மறக்க முடியாத உணர்வு. இன்று இந்தியா உலகளவில் மருந்துத் துறையில் முன்னணியில் திகழ்கிறது. அந்தத் துறையில் எங்களது பங்களிப்பிற்கான அடித்தளம் இங்குள்ள இந்த வகுப்பறைகளில்தான் எங்களது அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களால் அமைக்கப்பட்டது.”»
என்று Pharma Gems முன்னாள் மாணவர்கள் பெருமையுடன் நன்றி பாராட்டினர்
Alumni Meet – 2026 நிகழ்ச்சிக்கு திரு. எஸ். ஹரிராம் சுந்தரவெல் அவர்கள் தலைமை தாங்கினார். அசாம் மாநிலம் Royal School of Pharmacy-யின் டீன் டாக்டர் யெதுரு கிருஷ்ணா ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்களுக்கு தங்களது கல்லூரி நாட்களைப் பொக்கிஷமாகக் கருதி அனுபவிக்குமாறும், தங்களது வாழ்க்கையை வடிவமைத்த ஆசிரியர்களை மதித்து அவர்களின் பாரம்பரியத்தைப் போற்றுமாறும் அன்புடன் அறிவுறுத்தினர்.
இந்த 35 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகான சந்திப்பு, முன்னாள் மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் இடையிலான பாசத்தையும் நன்றியுணர்வையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திய ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.




