• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா..,

ByK Kaliraj

Aug 8, 2026

சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இக்கோவில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் சிறப்பு வாய்ந்த மாதங்கள் ஆகும். அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு நடந்து வந்து அம்மனை வழிபடுவர்.

இக்கோவிலுக்கு விழா காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆடி மாதத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்று இக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வாழ்த்து கோவிலை வந்தடைவார். இத்திருவிழா ஒரு வார காலம் கோலாகலமாக சிறப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் இன்று ஆடிப்பெரும் திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலத்துடன் தொடங்கியது.

இதற்கு முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு பால் பன்னீர் ஜவ்வாது சந்திரன் தேன் இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு சிவாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி திருவிழா கொடியினை ஏற்றினர். இக்கொடியேற்ற நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி திருக்கோவில் செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அரங்காவலர் குழு உறுப்பினர்கள் பூசாரிகள் கோவில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.