செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் அருள்மிகு திருவீதியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில், முதல் நாளாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இராட்சியம்மன் கோயிலிலிருந்து 108 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பெரியபாளையத்தம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் மண்ணிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா முழுவதும் பக்தி மற்றும் ஆன்மிகச் சூழல் நிலவியது.

இந்த ஆடித் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய கௌரவத் தலைவர் ம.வெ. பொன்னுசாமி, தலைவர் இரா. ஆனந்தராஜ், செயலாளர் பொன் தர்மராஜ், பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மண்ணிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த ஆடித் திருவிழா, ஆன்மிக எழுச்சியுடனும் பக்தி பரவசத்துடனும் நிறைவடைந்தது.





