சென்னை கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் இணைந்து, 200 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியது.

கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் சுமார் 200 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் நிறுவனர் திவ்யா கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, கல்வியே குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் மிகப்பெரிய முதலீடு என்றும், மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
கல்வி உபகரணங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இதுபோன்ற சமூகநல உதவிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என நன்றியைத் தெரிவித்தனர்.




