• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எல் நினோவால் வறட்சி அதிகரிக்கும்; புரதச்சத்து உணவுகளை அதிகரிக்க வேண்டும் – மருத்துவர்கள்”..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 18, 2026

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறை சார்பில் “VIN COM MED 2026 – Together for Health – Stand with Science” என்ற தலைப்பில், “One Health Approach” குறித்த தொடர் மருத்துவக் கல்வி (CME) நிகழ்ச்சி இன்று கல்லூரியின் புதிய கல்விக் கட்டிடத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் கே. சேரன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சமூக மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் கே. முஜிபர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து துணை முதல்வர்கள், மருத்துவக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து, ஜிப்மர் காரைக்கால் சமூக மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் அவினாஷ் குமார், “காலநிலை மாற்றமும் அதன் சுகாதார விளைவுகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், உலகை அச்சுறுத்தி வரும் எல் நினோ (El Niño) தாக்கத்தால் எதிர்காலத்தில் வறட்சி அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் தண்ணீர் வளங்களை பாதுகாக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கோடை மற்றும் வெப்ப அலை காலங்களில் பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல்துறை மூத்த உதவி பேராசிரியர் டாக்டர் ஏ.பி. பரூக் அப்துல்லா, “உணவே மருந்து – நோய் தடுப்பில் ஊட்டச்சத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், நாம் அன்றாட உணவுப் பழக்கத்தில் அதிக அளவில் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதாகவும், அதனை குறைத்து பருப்பு வகைகள், பயறு வகைகள், முட்டை, பால், மீன் உள்ளிட்ட புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் உடல்நலம் மேம்பட்டு, பல்வேறு வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான குறும்படம், ரீல்ஸ் மற்றும் மாதிரி உருவாக்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.