தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு விழிப்புணர்வுப் பேரணிகளையும் திட்டங்களையும் நடத்தி வருகிறார். எனவே, மாணவர்கள் யாரும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது” என்று அறிவுரை வழங்கினார்.

மேலும், “உங்களுக்குத் தெரிந்தவர்களோ அல்லது சக மாணவர்களோ ஏதேனும் போதை பழக்கத்தில் ஈடுபட்டிருந்தால், அதுகுறித்த தகவலை உடனடியாகத் தலைமை ஆசிரியரிடமோ அல்லது என்னிடமோ தெரிவிக்கலாம்” என்றும் கூறினார்.
தொடர்ந்து, ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்ற சட்டமன்ற உறுப்பினர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். சில நிமிடங்கள் மாணவர்களுடன் ஒரே பெஞ்சில் அமர்ந்து சகஜமாகப் பேசினார்.

அப்போது, “மாணவர்கள் அனைவரும் சிறப்பாகப் படித்து, பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்; வாழ்க்கையில் நல்ல முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





