• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்..,

BySeenu

Jun 29, 2026

பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்.., தொண்டாமுத்தூரில் எஸ்.பி வேலுமணி திடீர் நன்றி அறிவிப்பு கூட்டம் – இ.பி.எஸ் படம் மிஸ்ஸிங், புறநகர் செயலாளர் புறக்கணிப்பா ?

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பொதுவாக அ.தி.மு.க நிகழ்ச்சிகள் கட்சி கொடிகள், பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் போஸ்டர்களுடன் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்தின் முகப்பிலோ அல்லது அந்தப் பகுதியிலோ எந்தவிதமான ஆரவாரமும் இல்லை. கட்சி கொடிகளோ அல்லது எஸ்.பி. வேலுமணியின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டு இருந்தன. எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம் பெறவில்லை. மேலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் செ.ம வேலுச்சாமி அழைக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி,

தேர்தல் நேரத்தில் இரவு, பகலாக தனக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் இணைந்து உணவு அருந்தவும் மட்டுமே தான் வந்து உள்ளதாகத் தெரிவித்தார். அ.தி.மு.க நிகழ்ச்சிகள் ஏன் ? இவ்வளவு எளிமையாக, பேனர்கள் இன்றி நடைபெறுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிகழ்ச்சியில் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், மண்டபத்திற்கு உள்ளே எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன என்றும் விளக்கம் அளித்தார். மேலும், வரும் ஜூலை 2-ம் தேதி தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு செல்லவிருப்பதாகவும், அதற்கு முன்னதாகத் தன்னை வெற்றி பெறச் செய்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தவே இந்தச் சந்திப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தமிழக முதல்வர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு நியமனப் பதவிகளை வழங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,

எஸ்.பி. வேலுமணி எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார்.