மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி அம்மன் – மதுரை வீரன் சுவாமி கோவிலில் வைகாசி மாதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயம் செழிக்க வேண்டியும் , மழை பெய்ய வேண்டியும் கனி மாற்றுத் திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான கனிமாற்றுத் திருவிழா இன்று நடைபெறுகிறது.
இதற்காக 10 நாட்கள் கடும் விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மதுரை யானைக்கல் பகுதியில் பஜனை கூடத்தில் மேலாடையை கழற்றி உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொள்கின்றனர்.
பின்னர் அங்கு சிறுமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மலை வாழப்பழங்கள் ஓலைக் கூடையில் கட்டி வைக்கப்பட்டு அதனை தலையில் சுமந்தபடி பாதயாத்திரையாக சென்றனர்.

முன்னதாக மீனாட்சியம்மன் கோவில் முன்பிருந்து பூக்கூடைகளை அம்மனாடியாக உள்ள பெண் ஒருவர் எடுத்துக் கொடுக்க அதன் பின்னர் ஆண் பக்தர்கள் பழக் கூடைகளை தலையில் சுமந்தவாறு மேலாடையின்றி வெறும்கால்களில் நடந்து சிட்டம்பட்டி ஸ்ரீதேவி அம்மன் கோவில் வரை 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர்.
500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கட்டுக் கோப்புடன் மதுரை மாநகர பகுதியான சிம்மக்கல் , கோரிப்பாளையம் , கே.கே.நகர், மாட்டுத்தாவணி , ஒத்தக்கடை வழியாக சிக்கம்பட்டி சென்றனர்.
கோவிலின் அம்மனாடியான பெண் முன் நடந்து செல்ல ஆண் பக்தர்கள் அவர்களுக்கு பின்பாக தலையில் பழ கூடைகளை சுமந்தவாறு சென்றனர்.

4 மணி நேரம் நடந்தே செல்லும் பக்தர்கள் ஸ்ரீதேவி அம்மன் கோவிலுக்கு சென்றடையும் போது பெண் பக்தர்களை அவர்களை வரவேற்பர்.
பின்னர் பழக் கூடைகளில் உள்ள பழங்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
சங்க காலத்தில் இருந்து தொன்றுதொட்டு நடைபெறும் இந்த விழாவில் பெண் தெய்வத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விழாவாக நடைபெறுகிறது.
இவ்விழாவின் போது குழந்தை பாக்கியம் இல்லாத பெண் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் மேலும் திருமண தடை நீங்கும் கோவிலாகவும் ஸ்ரீதேவி அம்மன் கோவில் உள்ளது.
இது குறித்து பேசிய ஊர் அம்பலகாரரான ரவிக்குமார் :
சங்ககாலத்தில் இருந்து ஸ்ரீதேவி அம்மன் கோவில் கனிமாற்று திருவிழா நடைபெறுகிறது. விவசாயம் செழிக்க வேண்டும் மழை பெய்ய வேண்டியும் நடைபெறும் கனிமாற்று திருவிழாவில் ஆண் பக்தர்கள் மற்றும் கலந்து கொண்டு பழக்கூடையை சுமந்து சென்று அம்மனுக்கு சாத்துவார்கள்.

இந்த பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக உடல் முழுவதிலும் சந்தனம் பூசப்படும் அம்மனாடி முன்னே செல்ல பின்னால் ஆண் பக்தர்கள் செல்வம் ஊருக்கு செல்லும் போது பெண் பக்தர்கள் வரவேற்பு அளிப்பார்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கான வேண்டுதல் நிறைவேறும் என தெரிவித்தார்.




