மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டத்தின் கால்வாய்களை பலப்படுத்தும் பணிக்காக சுமார் 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கால்வாயில் உள்ள மதகுகள், பாலங்களை சரி செய்யும் பணிகள் நிறைவுற்றன.

இந்த பணிகளில் முக்கியமான பணியான கால்வாயின் கரைகளை பலப்படுத்தும் பணிக்காக மண் எடுக்க அனுமதி பெற தாமதமாகி வந்த நிலையில் தற்போது கனிமவளத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று இன்று முதல் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கண்மாயிலிருந்து மண் எடுத்து 58 கால்வாயின் கரைகளை பலப்படுத்தும் பணி துவங்கியது.
கீரிபட்டி கண்மாயிலிருந்து மண் எடுக்கும் பணியை நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் மொக்கமாயன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதன் மூலம் ஒரிரு மாதங்களுக்குள் 58 கால்வாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டு அதன் கொள்ளவான 320 கன அடியில் 250 கன அடி நீர் கொண்டு வரும் அளவு கால்வாய் பலமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
58 கால்வாய்க்கும் நிரந்தர அரசானை பெற தற்போதைய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் நிரந்தரமாக 58 கால்வாயில் தண்ணீர் வரும் போது உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறை நீங்குவதோடு, கனிசமான விவசாய பணிகளையும் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.




