காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் நலத்திட்ட நிகழ்வுகளின் தொடக்கமாக சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது.

புதுச்சேரி மாநில பாஜக சார்பில் ஜூன் 10 ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள் வரை மக்களுக்கான சேவைத் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் பாலமுருகன், மாநில செயலாளர் துரை சேதிபதி, விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் ராஜவேலு, பட்டியலில் அணி மாநில துணைத் தலைவர் கார்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், தொகுதி இளைஞர் அணி தலைவர் பன்னீர்செல்வம், தொகுதி மகளிர் அணி தலைவி நிர்மலா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு மேலும் வளர்ச்சி பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடுதல், அன்னதானம், ரத்ததான முகாம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.




