கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகார்தாரரான சிவகுமார் (56), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் எதிரியான பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி, புகார்தாரரின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டை காண்பித்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “பன்னிமடையில் தனக்கு சொந்தமான இடம் உள்ளது; அதை விற்பனை செய்ய வேண்டும்” என கூறி, பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக அழைத்து சென்று உள்ளார். அப்போது எதிரியான பேபி, தனது நண்பர்களான மோகன கிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன்(28) ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 01.06.2026 அன்று மாலை , அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும், புகார்தாரரின் கழுத்தில் அணிந்து இருந்த சுமார் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

இதுகுறித்து புகார்தாரர் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், மேற்படி வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பேபி @மாயா (21), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் மகன் மோகனகிருஷ்ணன் (27) மற்றும் வரதராஜன் மகன் கண்ணதாசன் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மேற்படி வழிப்படி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




