• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண் பரபரப்பு வாதம்..,

ByKalamegam Viswanathan

May 28, 2026

தன்னுடைய 28 ஆண்டு கால அனுபவத்தில் தவறு செய்ததாக தன் மீது ஒரு புகார் கூட பதிவானதில்லை. குற்றவாளிகள், அயோக்கியர்கள் சேர்ந்து சமூக வலைதளத்தில் எழுதுகின்றனர் என்று லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

சென்னை கொளத்தூரில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சந்தோஷ் சர்மாவை சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.அருணை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணிடம் நீதிபதிகள், ‘‘உங்கள் கருத்துக்களை கூறலாம்’’ என்றனர். அப்போது ஏடிஜிபி அருண், ‘‘மனுதாரரால் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் போலி கையெழுத்து வாங்கி பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மனுதாரர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கம்பெனி லா போர்டு முன்பும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றார்.

அதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குண்டாஸ் ஏன் போட்டீர்கள் என்றார். அதற்கு அருண், ‘‘பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பிரச்னை பெரிதாகிவிட்டதால் குண்டாஸ் போட்டோம்’’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், உங்களை பற்றி சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் வருகிறதே என்று கேட்டனர். அதற்கு அருண், சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி தவறாக, பொய்யான செய்திகளை பதிவிடுகிறார்கள். காவல்துறையில் அதற்கு பதிலளிக்க உரிய அமைப்பு எதுவும் இல்லை. கடந்த 28 ஆண்டு கால போலீஸ் பணி அனுபவத்தில் என் மீது ஒரு புகார் கூட இல்லை. தொழில் ரீதியாக, நேர்மையாக நான் பணி செய்யக்கூடியவன். தவறு நடக்கும்போது நடவடிக்கை எடுப்பேன். என்னால் நடவடிக்கைக்கு உள்ளான குற்றவாளிகள், அயோக்கியர்கள் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் தவறான பதிவுகளை எழுதுகிறார்கள். அவர்கள் 100 சதவீதம் பொய் பேசுகிறார்கள்.

பேச்சு சுதந்திரம் என்பது சமூக வலைதளங்களில் எழுதுகிறவர்களுக்கு மட்டுமே உள்ளது. அதனால் என்ன வேண்டுமானாலும் பொய்யாக எழுதுகிறார்கள். பேச்சு சுதந்திரம் அரசு ஊழியர்களாகிய எங்களுக்கு இல்லை. இதனால் எங்களுக்கு நீதிமன்றம்தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.
எனது பணி ரெக்கார்டுகளை நீங்கள் வாங்கி பாருங்கள். அந்த ரெக்கார்டுகளில் எனக்கு எதிராக ஒரு எழுத்து இருந்தாலும் என்மீது நடவடிக்கை எடுக்கலாம். என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் ரவுடிகளை வைத்து சோசியல் மீடியாக்களில் தவறாக ஆதாரமில்லாமல் விஷம பிரசாரம் செய்கிறார்கள், என்றார். ஒரு சில சமூக ஊடகங்கள் தான் தன் மீது பொய்யான ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக அருண் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறானது என்பதை தெரிவிப்பதற்காகவே உங்களை ஆஜராக உத்தரவிட்டதாக குறிப்பட்ட நீதிபதிகள், சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நாளை மறுநாள் பிறப்பிப்பதாக தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.