• Sun. Nov 1st, 2026

கோவையில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டத்தில் தீர்மானம்..,

BySeenu

Nov 1, 2026

கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் மற்றும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத் தலைவர் மற்றும் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சுப்ரமணியம் தலைமை வகித்தார். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் செ. துரைசாமியின் பவள விழாவை முன்னிட்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. சுமார் 600 பேர் பங்கேற்றனர்.

தமிழகக் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த சட்டம் இயற்ற வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் வழங்க வேண்டும், அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், சங்ககிரி மலையில் 1,130 திருக்குறள்களையும் கல்வெட்டுகளாகப் பொறிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிர்வாகம் சார்ந்த ஆணைகள் மற்றும் அறிவிப்புகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களின் பணிகளை ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.