கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
‘கடந்த 21 ஆம் தேதி மாலை சிறுமி காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது.
மேலும் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, அதே பகுதியில் வசித்து வரும் கார்த்திக் (வயது 33) மற்றும் அவரது நண்பர் மோகன் (வயது 30) ஆகியோர் சிறுமையை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
புகார் அளித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யும் போது தப்பி ஓட முயன்ற கார்த்திக் வலது கை மற்றும் வலது காலில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க உதவி செய்யப்பட்டு வருகிறது.உடற்கூறாய்வு செய்யப்பட்டு முதல் கட்ட தகவலின் படி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் முழுமையான உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு தெரியவரும்.

கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்தது போலவே விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சிறுமியின் கொலைக்கு நீதி பெற்று தரப்படும்’ என கூறினார்.





