• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

கோவை அரசு மருத்துவமனை கிட்னி வார்டில் ‘அவலம்’..,

BySeenu

May 16, 2026

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் முறையான சுகாதாரமின்றியும், தண்ணீரின்றியும் குப்பைக்காடாகக் காட்சி அளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையின் கிட்னி வார்டில் நாள்தோறும் 30 முதல் 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களையும் சேர்த்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வார்டில் தினமும் இருக்கின்றனர்.

இத்தனை பேருக்கும் சேர்த்து அங்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, இந்த வார்டில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாகப் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சையில் இருக்கும் பெண் நோயாளிகளும், ஆண்களுக்கான கழிப்பறையையே பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

சிறுநீரகப் பாதிப்பு உள்ள நோயாளிகள் அடிக்கடி கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய சூழலில், இந்தச் சுகாதாரமற்ற நிலை அவர்களின் உடல்நிலையை மேலும் மோசமாக்கும் எனப் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறும்போது; “நான் கடந்த 7 மாதங்களாக இந்த வார்டிற்குச் சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். கழிப்பறையில் கழுவுவதற்குக் கூடச் சரியான தண்ணீர் வசதி இல்லை. உணவு உண்ட பின் போடும் குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் அங்கேயே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

கழிப்பறையில் மின்விளக்கு வசதி இல்லாததால், வயதானவர்கள் நள்ளிரவில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து இரண்டு, மூன்று முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இந்த வீடியோவை எடுத்து வெளியிடுகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஒரு வார்டில் மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பெரும்பாலான வார்டுகளில் இதே நிலை தான் நீடிப்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏழை – எளிய மக்கள் நம்பி வரும் கோவை அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை குறித்து, மாவட்ட நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கழிப்பறைகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.