• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவன் சிலை உட்பட 5 சிலைகள் மாயம் பெண்கள் போராட்டம்..,

ByPrabhu Sekar

May 13, 2026

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட கீழ்கட்டளை செல்லியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திரெளபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் கடந்த சுமார் 4 ஆண்டுகளாக சிவன் சிலை உள்ளிட்ட 5 சிலைகள் வைத்து பராமரித்து கும்பாபிஷேகமும் செய்து பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜை நடத்திவிட்டு சென்ற நிலையில், திங்கட்கிழமை காலை பூஜைக்காக வந்தபோது சிவன் சிலை உட்பட 5 சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அப்போது சிலைகளை எடுத்துச் சென்று முவரசம்பட்டு ஏரியில் வீசியதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள், சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கோயில் நிர்வாகம் “நாளை பேசி முடிவு செய்யலாம்” என கூறி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை வரை நிர்வாகிகள் யாரும் வராததால், சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோஷங்கள் எழுப்பியதுடன், உடனடியாக சிலைகளை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவன் சிலை உட்பட 5 சிலைகளை யார் எடுத்துச் சென்றார்கள், எந்த காரணத்திற்காக அகற்றப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.