திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 27ஆம் தேதி திருத்தேரோட்டமும், 28ஆம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனம் வீதியுலா நடைபெற உள்ளது.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப கொடியை வீதியுலாவாக எடுத்துச் சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்த பின்னர் கொடி மரத்து கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 27ஆம் தேதி திருத்தேரோட்டமும், 28ஆம் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளது.



