• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பேச மைக் கிடைக்காததால் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட முன்னாள் எம்எல்ஏ..,

Byமுகமதி

Apr 19, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தன. விமல். இவர் எப்படியும் ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு காரணம் ஆலங்குடி அதிமுகவில் போட்டியிடுவதற்கு கட்சிக்குள்ளேயே பலரும் போட்டியிட்டனர். அந்த வகையில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள், போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், ஒன்றிய மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் என பலரும் போட்டியிட்டனர். இந்த முறை விமலுக்கு சீட் கிடைக்காது என்று பலரும் நினைத்திருந்த வேளையில், ஆலங்குடி தொகுதிக்குள் யாருமே எதிர்பாராத வண்ணம் விமலுக்கு சீட் கிடைத்தது. அதனால் தேர்தல் பரப்புரையில் தொடக்கத்தில் கட்சியின் விஐபிகள் பலரும் ஒதுங்கியே இருந்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

அவருக்காக சளைக்காமல் வேலை செய்தவர்கள் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாஞ்சன் விடுதி ராஜேந்திரன் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர். கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கும் துரை தனசேகரன், தனது மகன் விமல் தொகுதியின் வேட்பாளர் என்ற வகையில் எப்படியும் வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீவிரமாக வேலை செய்து வருகிறார். அதேபோல் தெற்கு ஒன்றிய செயலாளராக இருக்கும் பாண்டியன், வேட்பாளர் தனது நெருங்கிய உறவினர் என்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். மற்ற வகையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் வேளையில் சுணக்கம் காட்டி வருகிறார்கள்.

இதை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டதன் பெயரில் புதுக்கோட்டையின் முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் அவர்கள் விமலுக்காக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன் முக்கியமான பணியாக வேட்பாளருடன் திறந்த வாகனத்தில் பயணித்து அனைவரிடமும் வாக்குகள் கேட்டார். ஆலங்குடிக்குள் பல பிரச்சார மையங்களில் தனக்கு பேசுவதற்கு, வாய்ப்பு தருவார்கள், ஒலி வாங்கியை தனது கையில் தருவார்கள் என்று காத்திருந்தார்.

ஆனால் பல மையங்களிலும் ஒலிவாங்கியை கையில் தராததால் வெறுத்துப் போய் பாதியிலேயே தனது பரப்புரையை வாக்கு சேகரிப்பு பணியை, அந்த வாகனத்திற்கு பின்னால் வந்த தனது காரில் ஏறிச் சென்று விட்டார். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டதால் கட்சியினர் இடையே பெரும் சலசலப்பு. அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே எம்எல்ஏவாக இருந்தவர். இன்று வரை அதிமுகவில் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் முன்னிலைப் படுத்தப்பட்டு வருபவர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால்தான் அமைச்சரால் இங்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த அவர் கையில் ஒலிவாங்கியை கொடுக்காததால் அப்செட் ஆகிப் போய்தான் சென்றிருக்கிறார். இதை அறிந்த ஆலங்குடி தொகுதிக்குள் உள்ள மற்ற விஐபிகளும் தங்களுக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று கருதி சற்று ஒதுங்கியே இருக்கின்றனர்.