தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பாக, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெகநாத் மிஸ்ரா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவர் சீர்மரபினர் முறைப்படி தலையில் பாரம்பரியத் தலைப்பாகை அணிந்து, தனது ஆதரவாளர்களுடன் பலத்த விசில் சத்தத்துடன் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முஹமது இப்ராஹிம் அவர்களிடம் தனது மனுவை அவர் வழங்கினார். மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், வேட்பாளரை உறுதிமொழி வாசிக்கச் செய்து, முறைப்படி கையொப்பம் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:
தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில், 234 தொகுதிகளிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் தொகுதியாக கம்பம் தொகுதி இருக்கும். இந்தத் தொகுதியில் எனக்குப் போட்டியாக யாரும் இல்லை என்றே கருதுகிறேன்.
கம்பம் தொகுதியில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரியைக் கொண்டு வருவதற்கும் நான் தீவிரமாகப் பாடுபடுவேன்.
எனது தலையில் உள்ள இந்தத் தலைப்பாகை, தமிழகத்தில் உள்ள 2 கோடி சீர்மரபினர்களின் அடையாளமாகும். அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவே இதனை அணிந்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.



