“ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்… வென்ற பிறகு நம்மையே பிச்சைக்காரர்களாக்கி விடுவார்கள்” என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வித்தியாசமான முறையில் 50வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது.

தேர்தல் சூடு அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான நூர் முகமது தனது தனித்துவமான பிரச்சார பாணியால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அவர், இம்முறை முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சிறுவண்டியில் கயிறு கட்டி இருவர் இழுத்து கொண்டு வரப்பட்ட அவர், மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து, கையில் பிச்சை பாத்திரம் ஏந்தியபடி வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மக்கள் பணத்திற்காக ஓட்டு போடாமல், நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைக்கவே இந்த விதமான வேடமணிந்ததாக அவர் தெரிவித்தார். “இல்லையெனில், மொட்டை அடித்து தலையில் மிளகாய் அரைப்பதுபோல, நம்மை பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள்” என்றார்.
இதற்கு முன்பு தொண்டாமுத்தூர் தொகுதியில் 49வது முறையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தபோது, சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்த மண் சட்டியை உடைத்து, “ஓட்டுக்கு பணம் வாங்கினால், இறுதிச்சடங்கு வீட்டிலேயே நடக்கும்” என்ற விழிப்புணர்வு செய்தியையும் அவர் வெளியிட்டிருந்தார்.
மேலும், கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களுக்கு மக்கள் அடிமையாகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மக்கள்தான் மிகப்பெரிய அதிகாரம். மாற்றத்தை உருவாக்கும் சக்தி அவர்களிடமே உள்ளது” என்று கூறிய அவர், இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பிடத்தக்கது, நூர் முகமது இதற்கு முன்பு ‘ராஜா’ வேடத்தில் குதிரையில், விவசாயியாக ஏர் கலப்பையுடன், சவப்பெட்டியுடன் உள்ளிட்ட பல்வேறு விதமான முறைகளில் மனுத்தாக்கல் செய்து வந்துள்ளார். 1997ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது. ஜனாதிபதி முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மொத்தம் 48 முறை போட்டியிட்டுள்ள அவர், விழிப்புணர்வுக்காக மட்டும் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.



