• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..,

Byஜெ.துரை

Mar 17, 2026

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. எண்ணெய், பால் விலை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது.

மக்கள் குடும்பம் நடத்த கஷ்டப்படும் நிலை உள்ளது. ஆனால் முதல்வர் தினந்தோறும் போட்டோஷூட் நடத்துகிறார். இதுதான் திமுக அரசின் சாதனை. டாஸ்மாக்கில் ரூ.24,000 கோடி கொள்ளையடிக்கின்றனர்.

சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நட்களே இல்லை எனும் அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது.

தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழிகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர்.

வளர்ச்சியில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் சொல்கிறார். ஆமாம்.. கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. அனைவரையும் கடனாளி ஆக்கிவிட்டது திமுக. தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை.

தமிழகத்தில் ஒரு டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. வாக்குறுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார். நான்கில் ஒரு பங்கு வாக்கை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.

மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மே மாதம் ஆட்சிக்கு வருவோம். நல்லாட்சி தருவோம்.

வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.