தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மறைப்படுவது, அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர்களின் புகைப்படங்கள் பேனர்கள் அகற்றுவது, பறக்கும் படை வாகனங்கள் துவக்கி வைப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி தொகுப்பு புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது, மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

அண்ணா சிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் மாநகராட்சி பணியாளர்களால் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டது. தெற்கு சட்டமன்ற அலுவலகமும் காலி செய்யப்பட்டு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் புகைப்படம் அவரது பாஜக கட்சி சின்னம் பிரதமர் மோடியின் புகைப்படம் ஆகியவை மறைக்கப்பட்டன.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் GPS பொருத்தப்பட்ட பறக்கும் படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான பவன்குமார் ஆய்வு செய்து அவற்றை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்படும் பேனர்கள், கட்சி கொடிகள் ஆகியவை அகற்றப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் காலி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




