• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி…

ByT. Balasubramaniyam

Mar 5, 2026

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில், அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் “இளைஞர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சே. சித்ரா தலைமை வகித்தார். தொடக்க விழாவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “சட்டங்களை இயற்றி குடிமக்களை காக்கும் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் அரியலூர் மாவட்டத்திலுள்ள கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்திருந்தனர். நேரடியாக நடைபெற்ற திறன் போட்டியில் 24 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஐந்து நடுவர்களைக் கொண்ட குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் முதல் 5 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை அரியலூர் வருவாய் வட்டாட்சியர் செல்வி த. பிரேமி மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆ. ராமலிங்கம் வழங்கினர்.

மேலும், நாட்டுப்புற குழு நடனம், நாட்டுப்புற குழுப் பாடல், கதை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் அரியலூர் மாவட்டத்திலுள்ள 15 முதல் 29 வயதுக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 212 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னதாக மாவட்ட நோடல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் வெ. கருணாகரன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கோ. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.