• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விடுதி உரிமையாளர்கள் சொத்து வரி விவகாரத்தில் உரிய தீர்வு கோரி ஆணையரிடம் மனு..,

ByPrabhu Sekar

Feb 24, 2026

தாம்பரம் மாநகராட்சியில் விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள், சொத்து வரி தொடர்பான குழப்பத்திற்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சென்னை முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹாஸ்டல்கள் மற்றும் பி.ஜி. வசதிகள் இயங்கி வருகின்றன.

இவ்விடுதிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தாம்பரம் மாநகராட்சியிலிருந்து சில விடுதி உரிமையாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு, வீட்டு வரிக்கு பதிலாக கமர்ஷியல் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விடுதி உரிமையாளர்களிடையே அதிருப்தி மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழங்கிய நீதிமன்ற உத்தரவின்படி, முழுமையாக விடுதியாக செயல்படும் கட்டிடங்களுக்கு வீட்டு வரியே வசூலிக்க வேண்டும், கமர்ஷியல் வரி விதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற சூழ்நிலையிலும், சில அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து, தண்ணீர் இணைப்பை துண்டிப்பது மற்றும் கட்டிடத்தை பூட்டுவது போன்ற எச்சரிக்கைகள் விடுப்பதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

விடுதி நடத்துவது ஒரு சேவை சார்ந்த சமூகத் தேவையாக அரசாங்கமே கருதி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியது.

மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், விவகாரத்தை விரைவாக ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் ஹாஸ்டல் மற்றும் பி.ஜி. யூனிட் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் மகேந்திர பூபதி, துணை தலைவர் மகேஸ்வரி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.