• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சிவராத்திரி இரவு முழுதும் விழித்திருக்கும் பக்தி வழிபாடு..,

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்றும் , வாகனங்களில் சென்றும் சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.

இங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ!!! ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹரியும் சிவனும் ஒண்ணு;என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம். ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருவதாக வரலாறுப் பதிவில் கூறப்படுகிறது.

மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்; அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்;சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்; “கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி முதல் ஆலயமான திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்; அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்;சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. இன்றும் நாளையுமாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் தொடங்கி உள்ளது.

இது மட்டுமல்லாமல் வாகனங்களிலும் சென்று பக்தர்கள் 12 கோவில்களிலும் தரிசனம் மேற்கொள்வது வழக்கம். இந்த இரண்டு நாட்களில் தமிழகம் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை ஒட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில் நிர்வாகம் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 16 ஆம் தேதி காலையுடன் சிவராத்திரி முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த சிவாலய ஓட்டம் நிறைவடையும்.