• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம்..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலம் பாதையில் உள்ள அன்பு நகரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம், தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர், தனது வாழ்நாள் கனவு இல்லத்தை வெறும் கட்டிடமாக மட்டும் பார்க்காமல், தனது ஆதர்ச நாயகன் ரஜினிகாந்தின் நினைவாலயமாகவே செதுக்கியுள்ளார்.

வீட்டின் முகப்பிலேயே ரஜினிகாந்தின் தத்ரூபமான உருவச்சிலை நிறுவப்பட்டு, பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

இந்தத் தகவலை அறிந்த ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயண கெய்க்வாட்,நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்று திரும்பும் வழியில், திருப்பரங்குன்றத்தில் தனது வேண்டுதலை முருகன் கோயிலில் நிறைவேற்ற தனியார் விடுதியில் ல் தங்கியுள்ளார்.

மேலும் ரஜினியின் தீவிர ரசிகர் கோல்டன் சரவணன் இல்லத்திறப்பு விழாவிற்கு வர முடியாத நிலையில் இன்று மாலை சத்தியநாராயண கெய்க்வாட், கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவர் சந்திரகுமார் மதுரை ரஜினி மன்ற தலைவர் பால தம்புராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் கோல்டன் சரவணன் வீட்டிற்கு நேரில் வருகை தந்தார்.

வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த ரஜினியின் சிலையை ஆர்வமுடன் குழந்தை போல் தொட்டுத் தடவிப் பார்த்து, தம்பியின் மீதான ரசிகரின் அளப்பரிய அன்பைக் கண்டு பெரும் நெகிழ்ச்சிக்கு உள்ளானார்.

சிலையில் உள்ள சிரித்த முகமும், அதன் நேர்த்தியும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒரு ரசிகர் தனது வீட்டையே ஒரு கோவிலாக மாற்றியிருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், ரஜினிகாந்த் தற்போது 76 வயதிலும் தொடர்ந்து உழைத்து வருவதன் நோக்கம் மக்களுக்காகவும், தன்னை நேசிக்கும் ரசிகர்களுக்காகவும் தான் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் போது, ரஜினியின் ரசிகர்கள் நேர்மையுடனும், உழைப்புடனும் வாழ வேண்டும் என்றும், பெற்றோர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற ரஜினியின் அத்தியாவசியக் கொள்கைகளை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார்.

சூப்பர் ஸ்டாரின் சகோதரரே நேரில் வந்து வாழ்த்திய நிகழ்வு, கோல்டன் சரவணன் குடும்பத்தினரையும் அந்தப் பகுதி மக்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயண ராவ் கேக்வாத் செய்தியாளர்களை சந்தித்த போது

ஒரு நாலு நாளைக்கு முன்னாடி ராமநாதபுரம் டிஸ்ட்ரிக்ட் வந்தோம். அங்கே நம்ம நமச்சிவாயம் என்பவருடைய முருகர் கோவில் கும்பாபிஷேகம் இருந்தது. அதில் சிறப்பாள வைபவமா கலந்துக்கிட்டாச்சு. இந்த திருப்புரங்குன்றத்துல நம்ம சரவணன் அவர்களோட வீட்டுக்கு நான்கிரகபிரவேசத்துக்கு வரலை – அதுக்காக இந்த வழியாக வந்து அவங்களை சந்தோஷப்படுத்திட்டுப் போலாம்னு வந்தேன். ரொம்ப நல்லா வீடு கட்டிருக்காரு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

எல்லாம் நல்லா இருக்கணும், குடும்பம் நல்லா இருக்கணும், குழந்தைகள் நல்லா இருக்கணும்.

வெளியே அந்தச் சிலையை பார்த்தீங்களா எப்படி இருந்தது அந்தச் சிலை என்ற கேள்விக்கு

ரொம்ப, ரொம்ப, ரொம்ப அருமையா பண்ணிருக்காங்க. நேச்சுரலா இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. சிரிச்ச முகத்தோட பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்குங்க.

இது மாதிரி ஒவ்வொருத்தரும் வந்து தன்னோட வீட்ல சிலையை வச்சு அவரை (ரஜினிகாந்தை) தெய்வமாப் பாக்குறாங்க. இந்த உணர்வு உங்களுக்கு எப்படி இருக்கு என்ற கேள்விக்கு

சொல்ல முடியாது. தெய்வமாகப் பார்க்குறாங்க. அதுக்காக நான் அவர் மேல ரொம்ப அன்பு, பாசம் வைக்கிறேன். அந்த மக்களுக்காக நான் என்ன கேட்டாலும், என்ன சொன்னாலும், எங்கே கூப்பிட்டாலும் போயிடுவேன்.

எனக்கும் மகிழ்ச்சி, அவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு அவ்வளவுதான். அதுக்காக நான் எல்லாப் பக்கமும் போறேன்.

இப்போ மதுரையில ஒருத்தர் புரோட்டா கடை வச்சிருக்காரு. அவரைக்கூட கூப்பிட்டு ரஜினிகாந்த் ஹானர் பண்னியது என்ற கேள்விக்கு

ஆமா, தம்பி கூப்பிட்டேன். ஆமா, அந்தப் பையனை… ரொம்ப சந்தோஷம். பாருங்க, எவ்வளவு அன்பு பாருங்க. கஷ்டப்பட்டவங்களை தெரிஞ்ச தட்சணம் அவங்களைக் கூப்பிட்டுப் பண்ணேன். அவங்க எவ்வளவு… அது அவங்க பேரையே வச்சு கடை வச்சிருக்காங்களாம். அதுல பேரையே போட்டுருக்காங்க.

நேர்மை இருக்கும், நேர்மை… உழைப்பு… அதுக்காகத்தான் எல்லாரும் நல்லா வாழ்வாங்க. நேர்மையா இருக்கணும். சொன்னதைச் செய்யணும், செய்து காட்டணும். மக்களுக்கு ஆன உதவிகளைச் செய்யணும். தர்மம் பண்ணனும். பெற்றோர்களை நல்லா பாத்துக்கணும். அவர் அதைப்பத்தித் தான் சொல்றாரு தம்பி. அதே மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்க, நல்லா இருக்கும்.

இப்போ ஃபேமிலியும், ரசிகர்களும் – ஃபேன்ஸ் இருக்காங்களே… அவங்க ஃபேமிலியையும் சேர்த்துப் பார்க்கணும்னு ஒரு ரொம்ப நாள் கோரிக்கை என்ற கேள்விக்கு

ரொம்ப… ஆயிரக்கணக்கான பேர் காத்திருக்காங்க. யாரைப் பார்க்கிறது சொல்லுங்க? ரொம்ப… அவங்களுக்கு ஹெல்த், அதெல்லாம் பார்க்கணும் இல்லையா? அதுக்காகக் கஷ்டம். அது சொல்ல முடியாது. அவங்க விருப்பம், அவங்க இஷ்டம் அது. ரொம்ப கஷ்டம் அது. நூறு பேரை பார்க்க முடியாது, அதுக்கே டைம் வேஸ்ட் ஆகிப்போயிடும். அதோட பாவம் அவங்களுக்கு ஏதோ செலவு பண்ணிக்கிட்டு, வீட்ல வந்து காத்திருந்து… ஒரு போட்டோக்காக வருவாங்கன்னு வச்சுக்கோங்க. மனசார அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டே இருந்தா போதும். அந்த ஆசையெல்லாம் வேண்டாம்.

ரொம்ப கஷ்டம், பாவம். அவங்களுக்கு ரெஸ்ட் தேவை இல்லையா? (ரஜினிக்கு) 76 வயசு இப்போ. அதுக்கு இன்னும் உழைச்சுக்கிட்டு இருக்காங்க. அவருக்காக அல்ல, மக்களுக்காகத்தான். எல்லாம் நல்லா இருக்கணும், அவங்களுக்கு உதவியா இருக்கணும், எல்லாம் நல்லா இருக்கணும். அதுதான் எண்ணம் அவங்களுக்கு.

தமிழ்நாட்டு மக்கள் வந்து அவரை இவ்வளவு பெரிய உயரத்துல வச்சிருக்காங்களே, இது உங்களுக்கு எப்படித் தோணுது என்ற கேள்விக்கு

ரொம்ப, ரொம்ப, ரொம்பப் பெருமையா இருக்கு. ரொம்பப் பெருமை. அது சொல்றதுக்கு ஆகறது இல்ல. ரொம்பப் பெருமையா இருக்குஎன கூறினர்.

மேலும் ரஜினியும் தீவிர ரசிகரான கோல்டன் சரவணன் வீட்டிற்கு உங்களது அப்பா அம்மா பெயரை வையுங்கள் அவர்களது ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறினார்.