• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆண்களுக்கு ஆபத்தாகும் வெந்நீர் குளியல் : ஷாக் ரிப்போர்ட்

ஆறு, ஏரி, குளங்களில் களைப்பு தீர, அனுபவித்து மணிக்கணக்கில் குளித்த காலம் மலையேறிவிட்டது. வாழ்வியல் மாற்றங்களால் ‘நிதானமான காலை நேரக் குளியல்’ என்பது சாத்தியமற்றதாகி விட்டது.


இயந்திர ஷவருக்கு அடியில் அவசரக் குளியல் போட்டுவிட்டுச் செல்லும் நமக்கு, ‘காலையில் மட்டுமல்ல… மாலையிலும் மிதமான வெந்நீர் குளியல் அவசியம்’ என்கிறார் உடல் இயங்கியல் துறை பொதுநல மருத்துவர் அர்ச்சனா பி.குமார். ‘நீண்ட நேர வெந்நீர் குளியல் ஆண்களை மலடாக்கும்’ என்கிற அதிர்ச்சித் தகவலோடு வெந்நீர் குளியல் குறித்து நம்மிடையே பேசுகிறார்.

“அனைவருக்குமே மழைக்காலம், குளிர்காலத்தோடு, ஆண்டின் 365 நாட்களிலுமே சுடுநீர் குளியல் அவசியம். தொடர் சுடுநீர் குளியலை அவரவர் உடலின் சுடுதன்மையைத் தாங்கும் ஆற்றலைப் பொறுத்து தொடரலாம். குழந்தை பிறந்ததிலிருந்து தொடர்ந்து 100 நாட்கள் வரை வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி கூடும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைப்பதால் கிருமிகள் அழிந்துவிடும்.

இதனால் நோய்த்தொற்று ஏற்படாது. குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடலில் கை, கால்களில் புழுதிக்காற்று மூலமாக கிருமிகள் பரவும். அதனால், அவர்களை காலை, மாலை என இரு வேளையும் வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபடும். குளிர்காலங்களில் வேலை செய்வதற்கான முனைப்பு குறைந்து ஒருவித சோம்பல் ஏற்படுவது இயல்பு. வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் இரண்டு வேளை வெந்நீரில் குளிப்பது நல்லது. சோப்பின் நறுமணம், நீரின் சூடு களைப்பை போக்கி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.

சுடுநீரில் குளிப்பதால் நன்மைகள் இருந்தாலும் கெடுதல்களும் உண்டு. அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படும். ஆண்கள் பாத் டப்பில் நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பதால் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளித்து விட வேண்டும். பெண்கள் சுடுதண்ணீரில் குளிப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

இதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சோரியாசிஸ் போன்ற சரும நோயாளிகளுக்கு இயற்கையாகவே சருமத்தில் எரிச்சல் மற்றும் வறட்சி காணப்படும். இவர்கள் வெந்நீரில் குளிப்பதால் நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும். பொடுகு பிரச்னை உள்ளவர்கள் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில், சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருப்பதால் இவர்களுக்கு கொதிக்கும் நீராக இருந்தாலும், சூடு குறைவாகவே தெரியும். உடன் இருப்பவர்களின் உதவியுடன் தண்ணீரின் வெப்ப அளவை தெரிந்து கொண்டு குளிப்பது நல்லது. இல்லையெனில், அதிக சூடான நீரை மேலே ஊற்றிக் கொள்ளும்போது உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.

தொடர்ந்து சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் சரும வறட்சி, முடியில் ஈரப்பதம் குறைதல், கால்கள் மற்றும் உதடுகள் வெடிப்பதைத் தவிர்க்க வெண்ணெய், தேங்காய் எண்ணெய், கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.


உங்களுடைய சரும வகை சென்சிட்டிவ்வாக இருந்தால் நிச்சயம் சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது. அரிப்பு, அலர்ஜி போன்றவை இலவச இணைப்பாக வந்து சேரும்.


சுகமான தூக்கத்தைக் கலைக்க வெந்நீர்க் குளியல் தான் சிறப்பு என்று நினைப்பது தவறு. குளிக்கும் போது சுகமாக இருக்கும், உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்து ரிலாக்ஸ் ஆகும். ஆனால் குளித்து முடித்தவுடன் மீண்டும் தூக்கம் வரும். குட்டியாக ஒரு தூக்கம் போடலாம் என்று உடல் கோரும். புத்தம் புதிய நாளின் துவக்கத்தில் உங்களை படு சோம்பேறியாக்கிவிடும். தவிர தொடர்ந்து வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இளமைத் தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும்.


மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் சுடுதண்ணீர் குளியல் சுகமாகத் தான் இருக்கும். அப்படியே பழகிவிட்டால் உடல் அதற்கு அடிமையாகிவிடும். அதன் பின் வரும் வெயில் காலத்தில் கூட பலர் வெந்நீரில் தான் குளிப்பார்கள்.

பழக்கம் தான் காரணம். எனவே அடுத்த தடவை நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளும் போது இரண்டு சொம்பு குளிர்ந்த நீரில் முதலில் குளியுங்கள். அதன் பின் அந்த குளிர்ச்சி உடலுக்குப் பழகிவிடும். முழுக் குளியலையும் பச்சைத் தண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியாகும். அந்த நாள் சுறுசுறுப்பாகவும் இயக்கமாகவும் இருக்கும். தவிர உங்கள் சருமம் பொலிவாகும், தலைமுடி உதிராது. இளமையின் இருப்பிடமாக நீங்கள் இருப்பீர்கள்.