• Mon. Apr 29th, 2024

ஆரோக்கியத்தை கேலி செய்கின்றதா? தமிழக உணவகங்கள்!..

Byமதி

Dec 14, 2021

தற்போது எல்லாம் ஒரு செய்தி அடிக்கடி படிக்க நேரிடுகிறது. பிரியாணியில் புழு, பர்கரில் புழு, பரோட்டாவில் கலப்படம் என்ற செய்தி. இன்று கூட ஓசூர் அருகே உள்ள பிரபல ஸ்டார் பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலளாரிடம் கேட்டால் புழு எல்லாம் ஒரு விஷயாமா?” என்று பேசியதாக கூறப்படுகிறது. இது எத்தகைய மோசமான சுழல்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிரியாணி சாப்பிட்டு சிறுமி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள உணவகங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆனாலும், அடுத்த சில வாரங்களிலேயே சங்கராபுரத்தில் லெமன் சாதத்தில் பல்லி, தஞ்சாவூரில் இட்லியில் பல்லி, ஈரோடு உணவங்களில் பழைய உணவு பொட்களை பயன்படுத்தியது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹோட்டல் கடை உணவகங்களை மட்டுமே நம்பி வாழும் கல்லூரி மாணவர்கள், வேலைக்காக ஊர் விட்டு ஊர் சென்று வேலை செய்யும் இளைஞர்களுக்கு சுகாதார உணவு என்பது கேள்வி குறிதான். சிறிய உணவகங்களில் தான் கலப்படம் நடக்கும் உயர்தர உணவங்களுக்கு செல்வோம் என்று சென்றால் நிலைமை இன்னும் மோசம்.

இதற்கு முக்கிய காரணம் உணவை வீணாக்கக்கூடாது என்ற கொள்கையை மிகத்தீவிரமாக கடைபிடிக்கும் சில ஹோட்டல் முதலாளிகள் தான். தங்களின் ஹோட்டலில் எந்த உணவு மீதமானாலும் குப்பையில் கொட்டாமல் அதை ‘ப்ரஷ்’ ஆக்கி மீண்டும் சாப்பிடுவோர் டேபிளுக்கே மீண்டும் கொண்டுவந்து வைப்பதே.

சுத்தம் சோறு போடும் என்றால், பல ஹோட்டல்களில் அசுத்தம்தான் சோறு போடுகிறது. அந்த அளவுக்கு சமையலறை எங்கும் அசுத்தம் பரவி இருக்கிறது. சமையல் அறை பக்கம் சென்று வந்தால் அந்த ஹோட்டலுக்குள் செல்ல மனம் வரவேவராது. ஆனால், இதெல்லாம் தெரிந்தும் அலட்சியத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் அதுபோன்ற ஹோட்டல்களுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள்.

வீட்டில் மீதமான உணவை குப்பையில் கொட்ட மனமின்றி ப்ரிட்ஜில் வைத்து, தேவையானபோது எடுத்து சூடு பண்ணி சாப்பிட்டு சலித்தவர்கள், ஒரு மாற்றத்திற்காக ஹோட்டல்களுக்கு செல்லும்போது அங்கேயும் அதே டெக்னிக்கைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பற்றி நாம் யோசிப்பதே இல்லை.

ஹோட்டல்களில் உணவு சூடாகவும், சுவையாவும் இருந்தால் மட்டும் போதாது. சுத்தமாகவும், ஆரோக்கியமனதாகவும் இருக்கவேண்டியது அவசியம். சுடு தண்ணீர் வைப்பதைத் தவிர எல்லாவற்றுக்கும் விதவிதமான பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி நமக்கு விழிப்புணர்வு இல்லை.

எல்லா ஹோட்டல்களும் ‘உயர்தர உணவகம்’ என்று போர்டு மட்டும் பெரிதாக வைத்துள்ளன. ஆனால், சில ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளில் எந்தத் தரமும் இல்லாத காரணத்தால் ‘உயர்தர’ என்ற வார்த்தைக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது.

உணவே மருந்து என்ற வாழ்க்கை முறையில் வந்தவர்கள் நாம். ஆனால், இன்று ஹோட்டல் உணவை உண்டாலே சீக்கிரம் மருந்துகளுக்கு அடிமை ஆக வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. உணவை பணம் சம்பாதிக்கும் பெரும் வியாபாரமாக பார்க்கும் ஹோட்டல் முதலாளிகளிடம் தொழில் தர்மம், சேவை மனப்பான்மை போன்றவற்றை எதிர்பார்ப்பது அபத்தம்.

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு தான் வருகிறார்கள். விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் வருகின்றனர். இருப்பினும் உணவின் தரம் உயர்ந்த பாடில்லை.

அதற்காக அந்நியன் படத்தில் வருவது போல் எண்ணெய் சட்டியில் போட்டு பொரித்தெடுக்க வேண்டாம். சட்டங்களை மேலும் கடுமையாக்குவோம்.சட்டங்கள் கடுமையானல் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பதுக்கு ஏற்ப உணவின் தரத்தை கோட்டைவிடும் ஹோட்டல்களை கண்டுபிடித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க முடியும். பல உயிர்களை காக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *