• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மழை நீர் வடிகால் வசதி செய்து தர கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியேறிச் செல்ல முடியாமல் கழிவுநீருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பெய்த கன மழை காரணமாக சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் மழை நீர் தேங்கியது மழை நீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாத நிலையில் கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரும் கலந்து சென்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியில் மழை நீர் செல்ல வழி இல்லாத நிலையில் தெருக்களில் குளம் போல் தேங்கியது.

மேலும் கழிவு நீர் கால்வாயும் முறையாக சுத்தம் செய்யப்படாத நிலையில் கழிவுநீரும் மழை நீரில் கலந்து குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் துர்நாற்றம் வீசியதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. மேலும் கழிவுநீர் கால்வாயில் இருந்து விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வரும் நிலையும் ஏற்பட்டது. இதனால் சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்கள் ஒருவித பதற்றத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆகையால் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் தற்காலிக ஏற்பாடாக போர்க்கால அடிப்படையில் சோழவந்தான் பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்